வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபீஜுருக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபீஜுர் ரஹ்மான், ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகி இருந்தார். ஆனால், காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையில், அவரால் சரியாக விளையாட முடியவில்லை. அதேசமயம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேசம் அணியிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், அங்கு நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 0 - 2 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி படுதோல்வி அடைந்தது. இதனால், முஸ்தபீஜுருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் நடக்கும் ஐ.பி.எல் போன்ற 20 ஓவர் போட்டிகளில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முஸ்தபிஜுர் ரஹ்மான் காயமடைந்து ஓய்வில் இருந்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அவரால் விளையாட முடியவில்லை. தேசிய அணிக்கு பங்களிக்க முடியாமல் போன காரணத்தால், முஸ்தபீஜுருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போன்ற அயல்நாட்டு 20 ஓவர் தொடர்களில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கமுடியாது என வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். முஸ்தபீஜுரை மட்டுமே நம்பியா வங்காளதேசம் கிரிக்கெட் இருக்கிறதா? என்றும் பலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.