கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் இயல்பாகவே முறைகேடான சூதாட்டங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுவதுண்டு. அதனை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வரிவருவாயைப் பெருக்கமுடியும் எனவும், அந்நிய நேரடி முதலீட்டை அதிகமாக ஈர்க்க முடியும் எனவும் சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சட்டப்பூர்வமாக சூதாட்டம் நடைமுறைக்கு வந்தால், அதில் ஈடுபடுபவரின் ஆதார் மற்றும் பான் விவரங்களை இணைக்கவேண்டும். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதன்மூலம் பண மோசடிகளையும் குறைக்கலாம் என அந்த பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கேசினோக்கள் எனப்படும் சூதாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் இணையதளங்களை சட்டரீதியில் அனுமதித்தபின், அந்நிய செலாவணி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் சட்டப்பூர்வ திருத்தங்களை ஏற்படுத்தவேண்டும் என குறிப்பிட்டு, இதன்மூலம் அந்நிய நேரடி முதலீடு அதிகப்படுத்தப்படுவதோடு, வேலையில்லா திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.