இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்தாக் அலி கோப்பையில் பங்கேற்ற போது, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்ததாக பிரித்வி ஷா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பலகட்ட சோதனைகளை நடத்திய மும்பை கிரிக்கெட் சங்கம் பிரித்வி ஷா ஊக்கமருந்து உட்கொண்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் நவம்பர் 15 ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பிரித்வி ஷா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரித்வி ஷா, என் விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் மும்பை அணிக்காக விளையாடிய போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இருமல் சிரப் எடுத்துக்கொண்டேன். அதில் தான் தடைசெய்யப்பட்ட வேதிபொரும் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி மருந்தை உட்கொண்டதால் தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வண்ணம் மிகவும் கவனமுடன் செயல்படுவேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை, இந்திய அணிக்காக விளையாடுவதை தவிர எனக்கு எந்த பெருமையும் இல்லை. விரைவில் இந்த சூழலில் இருந்து மீள்வேன் என நம்பிக்கையுடன் பிரித்வி ஷா பதிவிட்டுள்ளார்.