ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகளவில் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற 12ஆவது அணியான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆடிவருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வைத்து தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் நிதானமாக ஆட, ஷிகர் தவான் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 87 பந்துகளையே சந்தித்த அவர் சதமடித்து அசத்தினார்; அதுவும் மதிய உணவு இடைவெளிக்கு முன்பாகவே. இதன்மூலம், மதிய உணவு இடைவெளிக்கு முன்பாகவே சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஆறாவத் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அணி மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக 27 ஓவர்களைச் சந்தித்து 158 ரன்கள் குவித்திருந்தது. 96 பந்துகளைச் சந்தித்திருந்த தவான் 107 ரன்கள் எடுத்திருந்த போது அகமதுசாய் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.