இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியில் தேர்வாவதற்கான யோ-யோ தேர்வில் ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் எப்படி அதில் தேர்வானார் என்பதுதான் இதில் விஷயமே.
தொடர்ந்து மிகச்சிறப்பாக ஆடிவரும் எந்த வீரருக்கும், யோ-யோ டெஸ்ட் என்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. நடந்துமுடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான யோ-யோ தேர்வில் தோற்று, அணியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார். அதேபோல், சஞ்சு சாம்சன் இந்தியா ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த தேர்வுமுறையால் தான் உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா கூட வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடந்த ஜூன் 15ஆம் தேதி நடந்த தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால், தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என அவர் கோரியதை அடுத்து, ஜூன் 19ஆம் தேதி மீண்டும் தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சொன்ன தேதியில் அவர் கலந்துகொள்ளாமல் இன்று காலை நடந்த தேர்வில் கலந்துகொண்டு தேர்வாகியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் பேசுகையில், ‘வீரர்களின் உடல்தகுதி என்பது தவிர்க்க முடியாத காரணியாக இருக்கலாம். ஆனால், அதற்காக வெறும் அரை மணிநேர தேர்வின் மூலம் அவர்களை அணியில் இருந்து நீக்குவது, அவர்களது கடந்தகால பங்களிப்பு கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ் இல்லையென்றால், மற்றொன்றில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படுவது போல், யோ-யோ தேர்விலும் இரண்டாம் வாய்ப்பு தரலாம். அடுத்த அரை மணிநேரமோ, அடுத்த நாளோ மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாம். இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் அம்பத்தி ராயுடுவின் நீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்திருந்தார். அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய சமமான வாய்ப்பை வலியுறுத்தும் யோ-யோ டெஸ்டில் ஒரு வீரருக்கு மட்டும் பல வாய்ப்புகள் தரப்படுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.