பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடைவிதிக்கப்பட்ட ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கனடாவில் நடைபெற்ற டி20 போட்டியில் களமிறங்கி அசத்தியுள்ளார்.
கனடா நாட்டில் குளோபல் டி20 எனப்படும் கவுண்டி கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ஐந்து அணிகள் களமிறங்கும் இந்தத் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், இந்தத் தொடரில் பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிடி, இலங்கையின் லசித் மலிங்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய வீரர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொடரின் முதல் போட்டி ஸ்மித் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கொவர் நைட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கெயிலின் வான்கொவர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்து கடினமான இலக்கை நிர்ணயித்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டொரண்டோ அணி அந்த இலக்கை எட்டி வெற்றிபெற்றது. பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடைவிதிக்கப்பட்ட ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மிகச்சிறப்பாக விளையாடி நிலையான ரன்குவிப்பில் ஈடுபட்டார். 41 பந்துகளைச் சந்தித்த அவர், 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 61 ரன்கள் எடுத்தார். அதேபோல், டேவிச் விளாசிய 92 ரன்கள் வெற்றிக்கு வழிவகுத்ததால், ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.