மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
முதல் லீக் ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா, அடுத்து தாய்லாந்து அணியை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்க்கொன்டது. இப்போட்டி கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடந்தது.
இந்த நிலையில், 3வது லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேச அணியுடன் மோதிய இந்தியா டாசில் வென்று பேட் செய்தது. இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் குவித்தது. மித்தாலி ராஜ் 15, பூஜா 20, கேப்டன் ஹர்மான்பிரீத் 42, தீப்தி 32, மேனா 14* ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் ருமானா அகமது 3, சல்மா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைடைந்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ருமானா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தலா 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன்ரேட் அடிப்படையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை இருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, பலம் வாய்ந்த இலங்கையிடம் மோதுகிறது.