நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் அசத்தி வரும் நிலையில் பஞ்சாப் அணியில் விக்கெட் கீப்பராக செயல்படும் ஜிதேஷ் ஷர்மா பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இறுதியாக மும்பையுடன் பஞ்சாப் விளையாடிய போட்டியில் ஜிதேஷ் ஷர்மா 27 பந்துகளில் 49 ரன்களைக் குவித்திருந்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்களை அடித்து இருந்தது. ஆனாலும் பஞ்சாப் அணி ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது.
ஜிதேஷ் சர்மா குறித்து சேவாக் பேசும்போது, “நான் குழந்தைகளுக்கு சொல்வது ஒன்றுதான். பந்தைப் பாருங்கள்; அதை எப்படி ஆட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்; அந்த பந்தை அடிக்கலாம்; தடுப்பாட்டம் ஆடலாம் அல்லது விட்டுவிடலாம். இவை அனைத்தும் பேட்டிங்கின் எளிமையான அடிப்படை விதிகள். இதைத்தான் ஜிதேஷ் சர்மா செய்கிறார். அவர் பந்தை உன்னிப்பாக கவனிக்கிறார். அந்த பந்தினை அடிக்க முடிந்தால் அதை அடிக்கப் பார்க்கிறார். அடிக்க இயலாத பந்து என்றால் சிங்கிள் எடுக்கிறார். மும்பை அணிக்கு எதிராக அவரது ஷாட் தேர்வு மிகச் சிறப்பாக இருந்தது.
இதை நான் முன்பே சொல்லியுள்ளேன். ஜிதேஷ் ஷர்மா, கவனிக்கப்படும் வீரர். ஒருவேளை அடுத்த ஒரு வருடத்தில் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதை நாம் பார்க்கலாம்” எனக் கூறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜிதேஷ் சர்மா 239 ரன்களை எடுத்துள்ளார். சராசரியாக 26.56 ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 165.97 என்பது குறிப்பிடத்தக்கது.