ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தொப்பியைக் கைப்பற்ற மும்பை மற்றும் டெல்லி அணி வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை நடைபெறுகிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கிற இப்போட்டியின் முடிவில், 13-ஆவது ஐபிஎல் தொடருக்கான வெற்றி மகுடத்தை சூடப்போவது யார் என்பது தீர்மானிக்கப்படும். அதே நேரத்தில் இப்போட்டியானது அதிக ரன்கள் குவித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத்தொப்பி மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிறத்தொப்பியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவும் அமைந்தது கூடுதல் சுவாரசியம்.
அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், முதல் இரு இடங்களில் முறையே கே.எல்.ராகுல் 670 ரன்களுடனும், ஷிகர் தவான் 603 ரன்களுடனும் முன்னணியில் உள்ளனர். முதல் இடத்தை கைப்பற்றி ஆரஞ்சு நிறத்தொப்பியை வசப்படுத்த ஷிகர் தவானுக்கு இன்னும் 67 ரன்கள் மட்டுமே தேவையுள்ளது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிகர் தவான், இதை சாத்தியப்படுத்தி ஆரஞ்சு நிறத்தொப்பியைக் கைப்பற்றுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், முதல் இரு இடங்களில் முறையே டெல்லி அணி வீரர் ரபடா 29 விக்கெட்டுகளுடனும், மும்பை அணி வீரர் பும்ரா 27 விக்கெட்டுகளுடனும் முன்னிலை வகிக்கின்றனர். இரு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோத இருக்கிற அணிகள் என்பதால், ஊதா நிறத்தொப்பியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.