கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் நாளை அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளாக உள்ள இரண்டு அணிகள் மோதுவதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்கு பின் அவர் களம் காண இருக்கும் முதல் போட்டி என்பதாலும் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இத்தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதுவரை சென்னை அணிக்காக விளையாடி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனை அஸ்வின் வசம் உள்ளது. அவர் சென்னை அணிக்காக 120 போட்டிகளில் விளையாடி மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் பிராவோ, 103 போட்டிகளில் விளையாடி மொத்தம் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளதால் முதல் ஒரு சில போட்டிகளிலேயே இச்சாதனை முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களுக்காக வழங்கப்படும் நீல நிறத்தொப்பியை பிராவோ இருமுறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.