13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் நான்காவது நாளான நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரின் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இறுதிகட்ட ஓவர்களில் சென்னை அணி வீரர்களின் மோசமான பந்துவீச்சே, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 20-வது ஓவரை வீசிய லுங்கி நெகிடி, 30 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது அவரது மோசமான பந்து வீச்சாக பதிவாகியுள்ளது. மேலும் இறுதி ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள் எனும் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.
இதற்கு முன்பு அப்பட்டியலில், புனே அணியைச் சேர்ந்த அசோக் திண்டா, பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஜோர்டன், கொல்கத்தா அணியைச் சேர்ந்த சிவம் மவி, சென்னை அணியைச் சேர்ந்த பிராவோ, ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த உனட்கட் ஆகியோர் உள்ளனர்.