இந்திய கிரிக்கெட் அணி மூத்த வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியில் இது போன்ற நடைமுறை இல்லை என பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் கம்ரான் அக்மல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "2007-ம் நடைபெற்ற உலக கோப்பை தோல்விக்குப் பின் இந்திய அணி நிர்வாகம் அதன் மூத்த வீரர்களை வெளியேற்றிவிடவில்லை. சச்சின், சேவாக், ட்ராவிட் அதன் பிறகு நீண்ட நாள் அணியில் விளையாடினார்கள். இளம் வீரர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கி அவர்களைச் சிறந்த வீரராக உருவாக்குவது வரை அவர்களது பங்களிப்பு அணியில் இருந்தது. இந்திய அணியில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ரோஹித்ஷர்மா, விராட் கோலியும், தற்போது வளர்ந்து வரும் இளம் வீரரான கே.எல்.ராகுலும் இதற்கு சரியான உதாரணம். பாகிஸ்தான் அணியில் இத்தகைய நடைமுறை இல்லை. பாகிஸ்தான் அணி நிர்வாகம் வகுக்கும் திட்டங்கள் மூத்த வீரர்களுக்கானதாக இல்லை. சோயிப் அக்தர், முகமது யூசுப் போன்ற சிறந்த வீரர்களை இன்னும் சில ஆண்டுகள் விளையாட வைத்திருக்கலாம்" என்றார்.