டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அஷ்வின் காயத்தின் நிலை குறித்து, அவ்வணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கமளித்துள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. பின்னர் வெற்றியைத் தீர்மானிப்பதற்கான சூப்பர் ஓவர் நடைபெற்றது. அதில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். காயம் ஏற்படும் முன் அஸ்வின் ஒரு ஓவர் பந்து வீசி 2 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அஸ்வின் மீண்டும் களத்திற்கு வந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், போட்டியின் இறுதிவரை அவர் களத்திற்குள் வரவில்லை. இதனால் அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையடுத்து டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "வெற்றி இலக்கு சிறியதாக இருக்கும்போது, விக்கெட் வீழ்த்துவது என்பது மிக முக்கியம். அஷ்வின் பந்து வீச்சு முக்கியமான ஒன்று. அவர் வீழ்த்திய விக்கெட்டுகள்தான் போட்டியை நாங்கள் விரும்பியவாறு மாற்றின. நான் தயார் என அஷ்வின் கூறிவிட்டார். ஆனால் இறுதி முடிவு எடுக்க வேண்டியது மருத்துவக் குழுவினரின் கையில்தான் உள்ளது" எனக் கூறினார்.