டி20 உலகக்கோப்பையை வெல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கனவு இன்று காலை தகர்ந்து போனது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் இந்த முடிவு உறுதியானது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் களமிறங்கின. இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்த முறை கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. அதைப் போலவே இந்திய அணியும் மிகச்சிறப்பாக விளையாடி வந்தது.
இந்நிலையில், ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில், இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 53 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. அதன்பிறகு 89ஆவது ரன்னில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரமாரியாக விழ, 112 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதேசமயம், இங்கிலாந்து அணி வெறும் 17 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதியானது.
இதுவொருபுறம் இருக்க, டி20 வரலாற்றில் அதிக ரன்களை எடுத்து சாதனை படைத்திருக்கும் மித்தாலி ராஜை ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்விகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து பேசிய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “என்ன முடிவாக இருந்தாலும் அது அணியின் முன்னேற்றத்திற்கான முடிவாகவே இருந்தது. பல சமயங்களில் அது பலனளிக்கும். இந்தமுறை ஏமாற்றிவிட்டது. இதற்காக வருத்தமெல்லாம் தெரிவிக்க முடியாது. நமது அணி மிகவும் இளமையானது என்பதால் இது மிகப்பெரிய பாடம். சிறப்பாக விளையாடியதற்காக அவர்களைப் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.