நியூசிலாந்து கிரிக்கெட் அணியின், ஆல்- ரவுண்டர் கோரி ஆண்டர்சன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 93 போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 36 பந்துகளில் சதமடித்துள்ளார். கோரி ஆண்டர்சனின் அந்த சதம், ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. பின்னர், இச்சாதனை டிவில்லியர்சால் முறியடிக்கப்பட்டது.
கோரி ஆண்டர்சன், தற்போது திடீரென்று சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி-20 தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டதும், தனது ஒய்வு முடிவைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோரி ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்தும், அமெரிக்க தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் கூறும்போது, "நியூசிலாந்து அணிக்காக விளையாடியதைப் பெரும் கௌரவமாகவும், மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளையாடவும், சாதிக்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், சில சமயங்களில், வேறு சில வாய்ப்புகள் உருவாகி, நாம் இதுவரை நினைத்துப் பார்க்காத திசையில் நம்மைத் தள்ளிவிடும். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்குச் செய்தவற்றுக்கெல்லாம், மிகவும் நன்றியுடன் இருப்பேன்" எனக் கூறியுள்ளார்.