இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று தனது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று தோனி அவரது 350 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 350 போட்டிகளை கடந்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 10 ஆவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்திய அணியில் சச்சின் மட்டுமே 463 போட்டிகள் விளையாடி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து இந்த சாதனையை புரியும் இரண்டாவது இந்திய வீரராக தோனி உள்ளார். அதுபோல சர்வதேச அளவில் சச்சின் (463), ஜெயவர்தனா(448), ஜெயசூர்யா(445), சங்கக்கரா (404), அப்ரிடி (398), இன்சமம் உல் ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350) ஆகியோர் மட்டுமே 350 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இவர்களுடன் 10 ஆவது நபராக தோனி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதே போல 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். சங்கக்கார 350 போட்டிகளில் விளையாடினாலும், அவர் ஆரம்ப காலகட்டங்களில் பேட்ஸ்மேன் பிரிவிலேயே விளையாடினார். பின்னரே அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று மாற்றப்பட்டார். தோனியின் இந்த சாதனையால் அவரது ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.