இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடே மைதானத்தில் தோனி பெயரில் இருக்கை அமைத்து அவரைக் கவுரவிக்க யோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானம் என்பது இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானம் ஆகும். பரபரப்பாக நடைபெற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் தோனி இறுதியில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது. இதில் அவர் அடித்த இறுதி சிக்ஸர் எந்த இருக்கை பகுதியில் விழுந்ததோ, அந்த பகுதி இருக்கைக்கு தோனி பெயரை சூட்ட யோசனை கூறப்பட்டுள்ளது. 'தோனியின் மிக உயர்ந்த பங்களிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும்' என எம்.சி.ஏ. விற்கு கடிதம் ஒன்றினை மும்பை கிரிக்கெட் சங்க அப்பெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் அஜிங்ய நாயக் எழுதியுள்ளார்.
இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட சில வீரர்கள் இதே போல கவுரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.