உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அனுபவ வீரர் ஸ்மித்துடன் இணைந்த இளம் வீரர் ஜாஸ் இங்லிஷ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்த அவர், அபாரமாக ஆடி 47 பந்துகளில் சதத்தைக் கடந்து இன்டர்நேஷனல் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடி 110 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களை விரைவிலேயே இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷனும், சூரியகுமாரும் களமிறங்கி ஆடி வருகின்றனர். சூரியகுமார் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்திய அணி 11 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சூரியகுமார் 48 ரன்களுடனும் இசான் 48 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
- வெ.அருண்குமார்