16 ஆவது ஐபிஎல் சீசனின் 7 ஆவது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் ஆடினர். பிரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழக்க மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்ஃப்ராஸ் கான் மற்றும் டேவிட் வார்னர் பொறுமையாக ஆட ரன் எண்ணிக்கை உயர்ந்தது. பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த வார்னர் 37 ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த ரூசோ முதல் பந்திலேயே வெளியேறினார்.
இறுதி ஓவர்களில் அக்ஸர் படேலின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்திருந்தது. அக்ஸர் படேல் 36 ரன்களை எடுத்திருந்தார். சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியில் ஷமி 3 விக்கெட்களையும் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ரஷித் கான் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
163 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஹா மற்றும் கில் இருவரும் தலா 14 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் பாண்டியாவும் 5 ரன்களில் வெளியேறினார். அதன்பின் இணைந்த தமிழக வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் ஷங்கர் ஜோடி குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுப்பாக ஆடிய விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பின் வந்த மில்லர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் 62 ரன்களை குவித்து குஜராத் அணி போட்டியை வெல்வதற்கு மிக உறுதுணையாக இருந்தார்.