2012-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு பேட்டியில் சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று சச்சினிடம் கேட்டிருந்தார். அதற்கு சர்வதேச போட்டிகளில் தனது சாதனையை ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோரால் முறியடிக்க முடியும் என்று சச்சின் கூறி இருந்தார். 2012-ல் ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் வளர்ந்துவரும் இளம் வீரர்களாக இருந்தனர். இன்று இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தி வருகின்றனர் கோலியும் ரோஹித்தும்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித்சர்மா இதுவரை 188 ஒருநாள் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,065 ரன்கள் குவித்துள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் 1,479 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார். 2011-ஆம் ஆண்டு வரை 72 போட்டிகளில் 1,810 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 116 போட்டிகளுக்கு 5,255 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித்சர்மா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் 50-க்கு மேல் சராசரி கொண்டு சாதனை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் 3 முறை 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 209 ரன்களும், 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 208* ரன்களும் எடுத்துள்ளார். 84 டி-20 போட்டிகளில் 3 சதங்கள் உள்பட 2,086 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் 3 விதமான போட்டிகளிலும் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை உடையவர்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்கள் உட்பட 6,286 ரன்கள் எடுத்துள்ளார். 211 ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் உள்பட 9,779 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு 40-க்கு மேல் சராசரியை கொண்டுள்ளார். 62 டி-20 போட்டிகளில் 2,102 ரன்கள் எடுத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு வரை 74 போட்டிகளில் 2,860 ரன்கள் எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 137 போட்டிகளில் 6,919 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த வீரர் ஆவர். சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 10,000 மற்றும் 15,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்த முதல் வீரர் ஆவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2018-ஆம் ஆண்டு விராட் கோலி பெற்றார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் இன்றைய வளர்ச்சியை அன்றே சச்சின் கணித்தது அற்புதமான ஒன்று. ஏனெனில் 2012-ன் போது ரோஹித் சர்மா ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்கூட விளையாடியது கிடையாது. விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இருவரும் 70 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று இருந்தனர். அந்த கால கட்டத்திலேயே சச்சின் அவர்களை பற்றி துல்லியமாக கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.