டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் தற்போது இல்லை என ஓய்வு குறித்து பரவிய தகவலுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர். தன்னுடைய துல்லியமான பந்துவீச்சினால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். குறிப்பாக வேகப்பந்துவீச்சிற்கு உகந்த மைதானங்களில் இவர் பந்து வீச்சை எதிர் கொள்வதற்கு பல பேட்ஸ்மேன்கள் சிரமப்படுபவர். சமீப காலமாக அவரது பந்துவீச்சு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என அந்நாட்டில் விமர்சிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என ஒரு தகவல் பரவியது. தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஓய்வு குறித்து பரவிய தகவல் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும்போது, "அந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. என்னால் எவ்வளவு காலத்திற்கு விளையாட முடியுமோ அது வரை விளையாடுவேன். இந்த வாரம் சிறப்பாக பந்து வீசவில்லை. இந்த வாரம் எனக்கான வாரமாக அமையவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக உணர்ச்சி வசப்பட்டேன். கடந்த போட்டிகளில் செய்த தவறை சரி செய்து விட்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்" என்றார்.
முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது இடத்தில் உள்ளார். தற்போது 590 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஆண்டர்சன் இன்னும் 10 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் பெற்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.