வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 கொண்ட போட்டித்தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் இன்று சட்டோகிராமில் காலை 9 மணிக்கு துவங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை சீனியர் வீரர்கள் பலர் அணியில் இல்லாதது அணிக்கு பெறும் பின்னடைவு. கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா, சமி ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. ஜடேஜாவிற்கு பதில் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டாலும் கூட அவரது இருப்பு ஜடேஜா அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக அமையும். வங்கதேச ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சவுரப் குமார் 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் புஜாரா ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. இந்தத் தொடர் அவருக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகக் கூட இருக்கலாம். இதில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும். ஏனெனில் பல இளம் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக ராகுல் செயல்பட அவருக்கு பக்கபலமாக விராட் இருப்பார் என்பதை எதிர்பார்க்கலாம். ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலம். முக்கியமான ஆட்டத்தில் பொறுமையாக விளையாடி கரைசேர்த்துள்ள ரிஷப் பண்ட் கடந்த சில ஆட்டங்களாக தன் ஃபார்மை இழந்து போராடி வருகிறார். இந்தத் தொடர் அவரது ஃபார்மிற்கு திரும்ப உதவியாக இருக்கும் என நம்பலாம்.
பந்துவீச்சில் அஸ்வின், சிராஜ், அக்ஸர், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் அல்லது உனத்கட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு டி20 தொடரைப் பறிகொடுத்த இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு போராட வேண்டும்.
மறுபுறம் வங்கதேச அணி ஷாகிப் அல் ஹசன் தலைமையில் களம் காண இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் அசத்திய ஹசன் மிராச் மற்றும் எபடோட் ஹூசைன் டெஸ்ட் போட்டியிலும் அசத்தலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் 6 டெஸ்ட் போட்டிகளில் 5 இல் வெல்வது கட்டாயம். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு மேலும் அதிகரிக்கும்.