Skip to main content

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Dwayne Pretorius retires from international cricket

 

தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் பிரிட்டோரியஸ் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சில நாட்களுக்கு முன்பு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்தேன். அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். வளரும் பொழுது தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே குறிக்கோள். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார். மீதி அவன் கையில் இருந்தது. இனி எஞ்சியுள்ள எனது கிரிக்கெட் வாழ்க்கையில் T20 போன்ற குறுகிய வடிவப் போட்டிகளில் எனது கவனத்தைச் செலுத்த உள்ளேன். 

 

எனது வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டும் என்னை அணிக்குள் வந்தவர் மற்றும் என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியவர். அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன். என் தாய், தந்தை மற்றும் எனது சகோதரருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கடைசியாக எனது மனைவி மற்றும் மகனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார். இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.