உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நிகழ்ச்சிகள், கூட்டங்கள் முதலியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதல் முறை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.