16 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 182 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக க்ரீன் 41 ரன்களை எடுத்தார். லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்களையும் யஷ் தாக்கூர் 3 விக்கெட்களையும் எடுத்தனர். பின் களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பின் மும்பை அணி வீரர்களான சந்தீப் வாரியர், விஷ்ணு வினோத் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் மேஜை மீது வைக்கப்பட்ட மாம்பழங்களுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். புகைப்படத்தில் காந்தியடிகளின் ஞானக்குரங்குகள் போல் இம்மூன்று வீரர்களும் உட்கார்ந்திருக்கின்றனர். இந்த புகைப்படம் சந்தீப் மற்றும் விஷ்ணு ஆகியோரின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்யபட்டு ‘ஸ்வீட் சீசன் ஆஃப் மேங்கோஸ்’ எனப் பதிவிடப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் நீக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த பதிவு வைரலானது.
இந்த மாம்பழ விவகாரம் சில போட்டிகள் முன்பே நவீன் உல் ஹக்கினாலே தொடங்கப்பட்டது. பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதிய ஆட்டத்தில் விராட் மற்றும் நவீன் உல் ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் பெங்களூர் அணி தோற்கும் போதெல்லாம் நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாவில் பெங்களூர் அணியை பகடி செய்வது போல் பதிவிட்டு வந்தார். தொடர்ந்து பெங்களூர் அணி மும்பை அணியுடன் தோற்றபோது நவீன், மாம்பழங்களைப் பற்றிய குறிப்புடன் பெங்களூர் அணியை பகடி செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி மும்பையுடன் தோற்ற பின் கிரிக்கெட் ரசிகர்கள் மாம்பழ புகைப்படங்களைப் பதிவிட்டு லக்னோ அணியையும் நவீன் உல் ஹக்கையும் ட்ரால் செய்த வண்ணம் இருந்தனர். இதன் பின்ன் லக்னோ அணியும் தனது ட்விட்டர் பதிவில், மாம்பழம் விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டரில் செய்யும் ட்ராலுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பதிவில், மாம்பழம் தொடர்பான சொற்களை அவர்கள் முடக்கியிருப்பதைக் குறிக்கும் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தது. இதனைத் தொடர்ந்து விவகாரம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஸ்விகி, சொமாட்டோ போன்ற உணவு நிறுவனங்கள் மாம்பழ புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறது.