16 ஆவது ஐபிஎல் தொடரின் 42 ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 விக்கெட்களை இழந்து 212 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 124 ரன்களை எடுத்து அசத்தினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் ராஜஸ்தான் அணி வலுவான இலக்கை எட்டியது. மும்பை அணியில் அர்ஷத் கான் 3 விக்கெட்களையும் சாவ்லா 2 விக்கெட்களையும் மெரிட்ரித் மற்றும் ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 214 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 55 ரன்களையும் கேமரூன் க்ரீன் 44 ரன்களையும் டிம் டேவிட் 45 ரன்களையும் குவித்தனர். டிம் டேவிட் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளையும் விளாசினார். ராஜஸ்தானின் அஷ்வின் 2 விக்கெட்களையும் சந்தீப் சர்மா, போல்ட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ராஜஸ்தான் அணிக்காக 8 முறை 50க்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளனர். இதற்கு முன் ரஹானே, ட்ராவிட் இணைந்து 8 முறை 50க்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ஜெய்ஸ்வால் குறைந்த வயதில் சதமடித்த 4ஆவது வீரர் ஆனார். அவர் 21 வயது 123 தினங்களில் சதமடித்துள்ளார். முதல் இடத்தில் மணீஷ் பாண்டே 19 வயது 253 தினங்களில் சதமடித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் 124 ரன்களுடன் முதலிடத்தை பட்லருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். பட்லர் ஹைதராபாத் அணிக்காக 2021ல் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் தனது அதிகபட்ச ஸ்கோரையும் நேற்று பதிவு செய்தார். மும்பை அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை ராஜஸ்தான் அணி நேற்று பதிவு செய்தது.
அஷ்வின் நேற்று இரு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டியில் 300 விக்கெட்களை வீழ்த்திய 2 ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் சாஹல் 311 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மும்பை அணி சேஸ் செய்து வெற்றி பெற்றதன் மூலம் மும்பை வான்கடே மைதானத்தில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.