என்னதான் நடப்பு சாம்பியனாக இருந்தாலும், இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அதுவும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் தந்த சென்னை அணிக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு நடப்பு சாம்பியனான மும்பைக்கும் அது அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவர் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, அதைத் தொடர்ந்து வரிசையாக கடைசி ஓவர் வரை வந்து தோற்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தது. தற்போதைய நிலையில், அந்த அணி 8 போட்டிகளில் களமிறங்கி வெறும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
ஏப்ரல் 26ஆம் தேதி 133 ரன்களை சேஷிங் செய்யமுடியாமல் டிஃபண்டிங் எக்ஸ்பெர்ட்ஸ் என அழைக்கப்படும் ஐதராபாத் அணியிடம் தோற்ற பஞ்சாப் அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் களமிறங்காமல் இருந்ததால், புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு அந்த அணி சென்றிருக்கும் நிலையில், மீண்டும் அதிரடி ஆட்டங்களைக் காட்ட அந்த அணி முனைப்பு காட்டலாம். என்னதான் பலமான அணியாக இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ராகுலைத் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. பஞ்சாப் அணியின் பலவீனமே மிடில் ஆர்டர்தான். இன்று அதில் சில மாற்றங்களை அஸ்வின் ஏற்படுத்தலாம். பந்துவீச்சிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. மிகவும் சிறிய மைதானம் இது என்பதால், சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம். இந்த மைதானத்தில் வைத்துதான் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்தார். 2017ஆம் ஆண்டு மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் வெறும் 15.3 ஓவர்களில் 199 ரன்களை மும்பை அணி சேஷிங் செய்த வரலாறு கண்முன்னே வந்து போகிறது. இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இருபது போட்டிகளில் தலா 10 போட்டிகளில் வெற்றிபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு மும்பை அணி தற்போதைப் போலவே, எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. ஆனால், எஞ்சியிருந்த போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக ஆடி, ப்ளே ஆஃபிற்கு முன்பாக 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து, பின்னர் கோப்பையையும் கைப்பற்றி மிரட்டியது. டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது உண்மையென்றால், மேலே சொன்னதுகூட அப்படியே நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு மும்பை அணி தயாராக வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய போட்டியில் ஜெயித்தாக வேண்டும். இல்லையென்றால், கோப்பைக் கனவுகளை மூட்டை கட்டிவிட்டு, அடுத்த அணிகளை கீழே இறக்கும் வேலைகளில் இறங்க வேண்டியதுதான்.