Skip to main content

சென்னையின் பலவீனமே எங்கள் இலக்கு.. கொல்கத்தா பளீச்! - ஐ.பி.எல். போட்டி #33

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

ஐ.பி.எல். வரலாற்றில் கன்சிஸ்டன்சி என்ற நிலைத்தன்மைக்கு பெயர்போன சென்னை அணி, இந்த சீசனிலும் அதை அப்படியே தன்வசம் தக்க வைத்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் நான்கு போட்டிகளில் 200 ரன்கள், நான்கு போட்டிகளில் கடைசி ஓவர் திரில்லிங் வெற்றி, இரண்டு போட்டிகளில் போராடித் தோல்வி என அதிரடியான அணியாக அது இருக்கிறது. இன்னமும் இரண்டு போட்டிகளில் வென்றாலே பிளேஆஃபிற்கு தகுதிபெறலாம் என்றாலும், முதல் இடத்தைத் தக்கவைக்கவே அந்த அணி முயற்சி செய்யும். 

Csk

 

ஓப்பனிங் ஆர்டர், மிடில் ஆர்டர் என பலமான அணியாக இருந்தாலும், மிதவேக பந்துவீச்சாளர்களை வைத்து எதுவும் செய்யமுடியாது என உணர்ந்த தோனி, கடைசி போட்டியில் லுங்கி என்கிடி மற்றும் ஆசிஃப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கினார். அது பலனளிக்கவும் செய்தது. இருந்தாலும், டெத் ஓவர்களில் சென்னை அணி இன்னமும் சுமாராகவே விளையாடிக் கொண்டிருக்கிறது. டெல்லி அணியுடனான கடைசி போட்டியில், விஜய் சங்கரை ஃபார்முக்குக் கொண்டுவந்ததே அதற்கு சான்று. அந்தக் குறைகளையும் களைந்துவிட்டு, இன்று சென்னை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். 

 

csk

 

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை 8 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தாலும், இன்னமும் தொங்குநிலையில் மாற்றம் இல்லை. ப்ளேஆஃபிற்கு முன்பாக அந்த அணியில் நிறைய மாற்றங்கள் நிகழவேண்டிய தேவை இருக்கிறது. இதுவரை இந்த அணி விளையாடியுள்ள போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளது. கடைசி நான்கு போட்டிகளில் ஒரு சிங்கிள் விக்கெட் கூட அந்த அணியால் பவர்ப்ளேயில் வீழ்த்த முடியவில்லை. 

 

கொல்கத்தா அணி எளிதில் வெற்றிபெறலாம் என்ற அளவுக்கு சென்னை அணி சாதாரணமானது இல்லை. இனிவரும் எல்லா போட்டிகளுமே கொல்கத்தா அணிக்கு அதே நிலைதான். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். டி20 போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 

kkr

 

‘நாங்கள் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இதுவரை ஆடிய 8 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்றுள்ளோம். சென்னை அணியின் பலவீனம் எதுவோ, அது மட்டுமே எங்கள் இலக்கு. எங்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்றாலும், எங்கள் பலம் எதுவோ அதில் அதிக கவனம் செலுத்தி, இன்றைய போட்டியில் வெற்றிபெறுவோம்’ என கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி பேசியிருக்கிறார். டெல்லி அணியுடனான போட்டியின் கடைசி ஓவரில் 28 ரன்களை ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாரிவழங்கிய அதே மாவிதான்.