இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரில் வெற்றிபெற்றும், ஒருநாள் தொடரில் தோல்வியும் அடைந்துள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்கியது இந்திய அணி. ஆனால், முதல் இரண்டு போட்டிகள் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியையே தந்தன.
இந்நிலையில், நாட்டிங்காமில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான முன்னிலையில் 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், இந்த இலக்கை எட்டமுடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, ஐந்தாவது நாளான இன்று தோல்வியடைந்தது.
இதன்மூலம், 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரின் நிலவரம் இருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், மீதமிருக்கும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.