கரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் ரத்தானால், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 38,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கரோனா காரணமாக ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 14 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ரத்தாகவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் ரத்தானால், இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் சில மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், டி20 உலகக்கோப்பை ரத்தாகும் நிலை ஏற்பட்டால் அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உலகக்கோப்பையை ரத்து செய்வது குறித்தோ, தள்ளிவைப்பது குறித்தோ ஐசிசி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.