உலகை மிரட்டிவரும் கரோனா என்ற கொடிய நோயின் தாக்குதலால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு இந்தியாவிலும் தற்போது அசுர வேகத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு 12 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்தன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வு, வழிபாட்டுத் திருவிழாக்கள், விளையாட்டுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டு நடைபெற இருந்த 13ஆவது ஐ.பி.எல். போட்டியும் நடைபெறமால் இருந்தது. இந்தாண்டு ஐ.பி.எல். நடக்குமா??? இல்லை முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்று பல்வேறு கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என அதன் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தம் 51 நாட்கள் போட்டிகள் நடைபெறும் என்றும் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. வீரர்களுக்கான கட்டுப்பாடுகள், போட்டி அட்டவணைகள் மற்றும் சிறப்பு விதிகள் குறித்து அடுத்த வாரம் நடக்க இருக்கிற ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் பட்சத்தில் வரவேற்பு எப்படி இருக்கும்??? ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்த வீரர்களின் உடற்தகுதி எப்படி இருக்கும் என்பது உட்பட பல சந்தேகங்களை இந்த திடீர் அறிவிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் போட்டிகள், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுக்கு இடையான டெஸ்ட்போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டன. இப்போட்டிகள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி அடிக்கும்போது வீரர்களே போய் எடுத்து வருவது டீவியில் பார்க்கும் பார்வையாளருக்கு பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கே இந்த நிலைமை என்றால் 'ஐ.பி.எல். என்றாலே அதிரடி, விறுவிறுப்பு' என மொத்தப் போட்டியையும் மூன்று முதல் நான்கு மணிநேரத்திற்குள் பார்த்துப் பழகிய ரசிகர்களிடம் இது எந்த மாதிரியான வரவேற்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீரர்களின் உடற்தகுதி குறித்துப் பார்க்கும் போது அவர்கள் முழு உடற்தகுதியோடு தான் உள்ளனாரா என்ற சந்தேகமும் எழுகிறது. முழுமையற்ற உடற்தகுதியோடு விளையாடும்போது அது ஏதேனும் காயத்தை ஏற்படுத்தி அடுத்தடுத்து வர இருக்கின்ற இந்திய அணிக்கான போட்டிகளில் அவர்கள் பங்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிடாதா என்ற கேள்வியையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நீண்ட நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி மனதளவில் சோர்வுற்ற ரசிகர்களுக்கு ஐ.பி.எல். புத்துணர்வு தரும் மருந்தாக அமைந்தால் சந்தோசம் தான்...