4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பாகிஸ்தான் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இந்தியா வந்ததுமே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இந்தியாவில் உள்ள ஏராளமான உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஹைதராபாத் பிரியாணியும் அடக்கம்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம், பாகிஸ்தானின் கராச்சி பிரியாணி அல்லது இந்தியாவின் ஹைதராபாத் பிரியாணி இதில் எது சிறந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உற்சாகமாகப் பதில் அளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “ஹைதராபாத் பிரியாணி தான், அதற்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார். அதே கேள்வியை அசன் அலியிடம் கேட்டபோது, “ஹைதராபாத் பிரியாணிக்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். பிரியாணிக்கு ஆசைப்படுபவர்கள் ஹைதராபாத் பிரியாணியை தான் சாப்பிட வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து, இமாம் உல்ஹக் கூறும்போது, “ஹைதராபாத் பிரியாணி தான் அற்புதம். நான் 10க்கு 11 மதிப்பெண் கொடுப்பேன்” என்றார். மற்றொரு வீரரான ஷதாப் கான், “ஹைதராபாத் பிரியாணி உலக பேமஸ் ஆச்சே... இந்தியா வந்ததும் முதலில் அதைத்தான் சாப்பிட்டேன். அதற்கு 10க்கு 20 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார்.