இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நாளை (02-09-2023) இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ளது. நேபாள் அணியை முதல் ஆட்டத்திலேயே 238 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளதால், நிச்சயம் இந்தியாவுக்குப் பலமான எதிரணியாக விளங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் எதிர்கொள்ளும் ஆட்டங்கள் அனைத்திலும் ரசிகர்களின் உணர்வுகள் கலந்திருக்கும். கோடிக்கணக்கான கிரிக்கெட் பிரியர்களுக்கு இவர்களின் ஆட்டங்கள் தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இவ்விரு கிரிக்கெட் அணிகளும் உலகளவில் பெரிய இடத்தை தக்கவைத்துள்ளது நிதர்சனம். தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளன. இப்படி மிகப்பெரிய கிரிக்கெட் வரலாற்றைக் கொண்டுள்ள இந்த இரு அணிகள் தான் மறுபடியும் நம்மை மகிழ்விக்க வருகிறார்கள். ஆம், நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தில் இவர்கள் எதிர்-எதிரே விளையாடப் போகிறார்கள். அதற்கு முன், ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டிகளின் விவரங்கள், வெற்றிகள், தோல்விகள், அதிக ரன்கள் குவிப்பு, அதிக விக்கெட் குவிப்பு குறித்துப் பார்ப்போம்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் முடிவுகள் சற்று சமமாக உள்ளன. ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு முன்பு 16 போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என வென்று முன்னிலையில் உள்ளது. 13 ஒரு நாள் போட்டிகளில், 7 முறை இந்தியாவும் 5 முறை பாகிஸ்தானும் வென்றுள்ளது. ஒரு ஆட்டம் மட்டும் முடிவு ஏதுமின்றி முடிந்தது. இதனடிப்படையில், எதிரெதிர் ஆட்டத்தில், இந்தியா, ஒருநாள் போட்டி வெற்றி விகிதாச்சாரத்தில் 53.85% மற்றும் டி20 யில் 66.66% வைத்துள்ளது. பாகிஸ்தான் 35.71% ஒரு நாள் போட்டியில், 33.33% டி20யில் வைத்துள்ளது. 1984 ஆண்டு தொடங்கி நடந்து வரும் இந்த தொடரில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் சந்தித்தது இல்லை.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைச் சேர்த்து இந்தியா 7 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. பாகிஸ்தான் இரண்டு முறையே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
இன்னும் சற்று ஆராய்ந்தால், ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். அவர் 7 போட்டியில் 367 ரன்கள் எடுத்துள்ளார், அதைத் தொடர்ந்து விராட் கோலி 3 போட்டியில் 207 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில், முன்னாள் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக், 5 ஆட்டம் மட்டும் விளையாடி 428 ரன்கள் விளாசியுள்ளார். பந்து வீச்சில் எடுத்துக்கொண்டால் சயீத் அஜ்மல் 8 விக்கெட்டும். அனில் கும்ப்ளே 7 விக்கெட் என வீழ்த்தியுள்ளனர்.
டி20 போட்டியை எடுத்துக்கொண்டால், விராட் கோலி மூன்று இன்னிங்க்ஸ் மட்டுமே விளையாடி 144 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்தபடியாக முகமது ரிஸ்வான் 114 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று இன்னிங்ஸ்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும். அவருக்கு அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் மற்றும் முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
முந்தைய ஆட்டங்களின் புள்ளி விவரங்களில் இந்தியா சற்று முன்னிலை வகித்தாலும், பாகிஸ்தான் அணி தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதனால் ஆட்டம் நிச்சயம் வலுவாக இருக்கும். நாளைய போட்டியில் இந்திய அணியில்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (கீப்பர்), விராட் கோலி, ஷுப்மான் கில், திலக் வர்மா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் (கீப்பர்), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் , பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியில்: பாபர் அசாம் (கேப்டன்), முஹம்மது தயாப் தாஹிர், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஃபஹீம் அஷ்ரப், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், முகமது ஹாரிஸ் (கீப்பர்), முகமது ரிஸ்வான் (கீப்பர்), நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் உள்ளனர்.