இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நேற்று(31-09-2023) இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டி முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
நேற்று இலங்கை பல்லேக்கலேவில் ஆசியக் கோப்பை 2023ன் இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பின்னர், சாகிப் ஹல் ஹசன் தலைமையில் பேட் செய்ய வங்கதேசமும். இலங்கையின் கேப்டன் தசன் ஷனகாக தலைமையிலான அணியினர் பந்து வீசவும் களமிறங்கியது. ஏற்கனவே, 2018ல் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியில் இரு அணிகளுக்கும் 'நாகின்' நடனம் விவகாரத்தில் மோதல் போக்கு இருந்தது. இதனால் நேற்றைய ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயீம் மற்றும் தன்சித் ஹசன் களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர், நிதானமாக விளையாடிய நஜ்முல் ஹோசைன் சாண்டோ 122 பந்துகளில் 89 ரன்களை எடுத்து அணியை காப்பாற்றினார். அணியின் கேப்டன் சாகிப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளிக்க, தௌஹித் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இலங்கையின் அபார பந்து வீச்சை எதிரணியினரால் எதிர்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, மதீஷா பதிரானவின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம். அடுத்து தீக்ஷன 2 விக்கெட்டுகளை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். இதனால் முதல் பாதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணியால் 164 ரன்களே குவிக்க முடிந்தது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 165 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்கொள்ள இலங்கையின், கருணரத்னே - நிஷாங்க கூட்டணி களம் கண்டது. டஸ்கின் அஹ்மத் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் கருணரத்னே 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து விளையாடிய நிஷாங்க 14 ரன்களுடன் வெளியேற இலங்கை அணி 15 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. இவரைத் தொடர்ந்து குஷால் மென்டிசும் சாகிப் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, மேலும் இலங்கை தடுமாறியது. இதன் பின்னர் ஆட்டம் சற்று விறுவிறுப்பாக மாறும் என்ற சூழல் உருவானது. ஆனால், அடுத்து களமிறங்கிய அசலாங்க - சமரவிக்ரமா கூட்டணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 69 பந்தில் 54 ரன்கள் எடுத்து சமரவிக்ரமா வெளியேற அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா ஒற்றை இலக்கில் வெளியேற்றப்பட்டார்.
இதனால், 128 ரன்னில் 5 விக்கெட்டுகள் இழந்த இலங்கை அணி சற்று தொய்வடைந்தது. ஆனால், அசலங்காவின் அசத்தலான 62 ரன்களின் மூலம் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 'பி' பிரிவு பட்டியலில் இலங்கை அணி இரண்டு புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. நேற்றைய ஆட்ட நாயகன் விருதை 4 விக்கெட்டுகள் எடுத்த மதீஷா பதிரான பெற்றார்.
தொடர்ச்சியாக 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 21 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, அதிக தொடர் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது. ஆசியக் கோப்பையின் மூன்றாவது லீக் ஆட்டம் நாளை பல்லேக்கலே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன.