இந்தியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட இருக்கிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டி இன்று நடைபெற்றது. ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சினை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஃபின் ஆலன் 35 ரன்களும் கான்வே 52 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விக்கெட்கள் விழுந்தாலும் மிட்செல் இறுதியில் சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி வலுவான இலக்கை எட்ட உதவினார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் 30 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 13 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாற சூர்யகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டிய போதும் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் சூர்யகுமார் 47 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்தின் பிரேஸ்வெல், ஃபெர்குசன், சாண்ட்னர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக மிட்செல் தேர்வு செய்யப்பட்டார்.