சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் துவங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரின் முடிவில் 374 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 114 ரன்களும், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் குவித்தது. அதன்பின் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிய, 50 ஓவரின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 90 ரன்கள் குவித்தார். இதன்மூலம், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 29 -ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.