உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு இந்திய அணி வெளியேறிய வலி இன்னும் குறையாமல் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். வின்னிங் ஷாட்டை தோனி அடிப்பார் என்று காத்திருந்த தோனி ரசிகர்களுக்கு அவரது ரன் அவுட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற பதைப்பிலும் அவர்கள் இருக்கிறார்கள். நடந்து முடிந்த அரை இறுதி போட்டிகள் குறித்தும் நாளைய இறுதிப்போட்டி குறித்தும் பல கேள்விகளோடு பிரபல விளையாட்டுத் துறை பத்திரிகையாளரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆர்.கே எனும் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அவரது விரிவான பதில்கள்...
இந்தியா- நியூசிலாந்து விளையாடிய அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கேப்டனாக கேன் வில்லியம்சனின் எந்தெந்த முடிவுகள் இந்த வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது?
கேன் வில்லியம்ஸனுடைய கேப்டன்ஸி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விராட் கோலிக்கு அவர் வைத்த ஃபீல்டிங் செட்டப் ரொம்பவே முக்கியமான ஒன்று. விராட்டை ஆஃப் ஸைடில் விளையாட வைக்க முழுக்க அந்த பகுதியிலேயே பந்தை வீச வைத்து, பின்னர் பந்தை உள்ளேகொண்டு வந்து அவருடைய விக்கெட்டை எடுத்தது ஃபெண்டாஸ்டிக். விராட்டின் ப்ரைம் ஸ்கோரிங் பகுதிகளை முழுக்க தடுத்த வில்லியம்ஸினின் கேப்டன்ஸியின் ஆக்ரோசம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேபோல மஹேந்திரசிங் தோனி விளையாடவந்தபோது லெக் ஸைடில், லெக் கல்லியும் இல்லாமல் ஸ்கொயர் லெக்கும் இல்லாமல் இரண்டிற்கும் மத்தியில் நிறுத்தியது மாஸ்டர் ஸ்ட்ரோக். கொஞ்சம் தூக்கி அடித்தாலும் அந்த இடத்தில் மாட்டிக்கொள்வோம் என்று நமக்கு தெரியும். அதுபோல ஒரு ஃபீல்டிங்கை செட் செய்தது. சில நேரங்களில் தேர்ட் மேன் கூட வைக்காமல் பந்து வீசியது எல்லாம் அக்ரீஸிவ் கெப்டன்ஸி. 240 மட்டுமே அடித்திருக்கிறோம் என்றபோது சரியான நேரத்தில் ஃபீல்டிங்கை ஸ்ப்ரெட் செய்ய வேண்டும், சரியான ஃபீல்டிங்கை உள்ளுக்குள் கொண்டு வரவேண்டும். அதை அனுபவம்தான் கற்றுக்கொடுக்கும்.
கேன் வில்லியம்ஸன் ஐபிஎல்லில் ஒரு மேட்ச் தவறாக ஃபீல்ட் செட்டப் செய்ததால் ஒரு மேட்ச்சை இழக்க நேர்ந்தது. என்னடா வில்லியம்ஸனா இப்படி ஒரு தவறை செய்தார்? என்று கேள்வியும் கேட்டிருக்கிறோம். அங்கிருந்து தற்போது சூப்பரான கம்பேக் கொடுத்திருக்கிறார். ஒருவர் பேட்டிங் ஸ்டைல் எப்படி இருக்குமோ அதைபோலதான் அவர்களுடைய கேப்டன்ஸி ஸ்டைலும் இருக்கும் ஆனால், கேன் வில்லியம்ஸன் ஒருவர்தான் பேட்டிங்கிற்கு ஒரு தனி ஸ்டைல், கேப்டன்ஸிக்கு ஒரு தனி ஸ்டைல் என்று வித்தியாசப்படுகிறார். நியூசிலாந்து அணிக்கு ப்ரெண்டான் மெக்கல்லம் ஆக்ரோசமான ஒரு அணியை கொண்டுவந்தார், அதைபோல கேன் வில்லியம்ஸனின் அணி இருக்குமா என்று அவர் கேப்டனாக பொறுப்பேற்றபோது கேட்டோம் அதற்கெல்லாம் தற்போது சூப்பராக பதிலளித்திருக்கிறது கேன் வில்லியம்ஸனுடைய அக்ரஸிவ் கேப்டன்ஸி.
மழையினால் மீதமுள்ள போட்டி ரிஸர்வ் டேவில் விளையாடப்பட்டது. நியூசிலாந்திற்கு எந்தெந்த வகையில் சாதகமாக அமைந்தது?
இந்தியா நியூசிலாந்துக்கு இடையே நடந்த அரையிறுதி ஆட்டம் ரிஸர்வ் டேவுக்கு போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாதது. ரிஸர்வ் டேவுக்கு போய்விட்டது என்றால் போனதுதான். இது நியூசிலாந்து அணிக்கு வெற்றியை கொடுத்ததா என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லுவேன். உலகக்கோப்பைக்கு முன்பு 240 ரன்களை சேஸ் செய்திருக்கலாமா ? என்றால் ஜாலியாக அடித்திருக்கலாம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், உலகக்கோப்பையில் இருக்கும் பிரஸ்ஸர் என்பது வேறுமாதிரியானது. இரண்டாவது நாள் சென்றதால் நியூசிக்கு சாதகம் என்றெல்லாம் சொல்லமுடியாது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் சரியாக விளையாடியிருக்கலாம். அதேபோல நியூசிலாந்தின் பவுலிங் செமயாக இருந்தது. ட்ரெண்ட் பவுல்ட் சாதரணமான பவுலர் கிடையாது. அவர்களுடைய சிறந்த பவுலிங்தான் இந்தியா தோல்வியடைய ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இரண்டாவது நாள் சென்றதால் இல்லை. கிரிட்டிக்கல் சமயத்தில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் அதுதான் உண்மை.
ஐசிசி தொடர்களில் பெரிய அனுபவம் இல்லாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்தியா பின்னடைவை சந்தித்ததா?
கடந்த ஒன்றரை வருடமாக நான்காவது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்று பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். முதலில் அம்பதி ராயுடுதான் ஆடுவார் என்று இருந்தது. ஆனால், கடைசியில் அவரை ட்ராப் செய்தார்கள். விஜய் சங்கர் நம்பர் 4 இடத்தில் விளையாடுவார் என்று அறிவிப்பு வந்தது. இதுவரை அவர் ஆடாத பொஸிஸனில் நேரடியாக விளையாடுவது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிற நினைப்பு பலருக்கும் இருந்தது. ரோஹித், விராட் அவுட்டாகிவிட்டால் அவரை தொடர்ந்து நின்று விளையாட எந்த அனுபவம் வாய்ந்த வீரரும் அந்த இல்லை. ரிஸப் பந்த் அந்த இடத்தில் ஒரு சிறந்த வீரரா? பலரும் அவர் அடித்துதான் ஆடுவார் வேறு என்ன அவருக்கு தெரியும் என்று என்னை ட்விட்டரில் திட்டவும் செய்திருக்கிறார்கள். முதலிலிருந்து 4ஆவது இடத்தில் எந்த மாதிரியான ஒரு வீரர் ஆடியிருக்க வேண்டும் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். 2011ஆம் ஆண்டில் அந்த இடத்தில் யுவராஜ் சிங் என்ற ஒரு வீரர் இருந்தார். பொறுமையாகவும் ஆட வேண்டும், அதே சமயத்தில் கணக்கிட்டும் ஆட வேண்டும்.
மேலும் அவர் ஒரு அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தார். ஆனால், இந்தமுறை அந்த இடத்தில் அப்படி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் யாரும் இல்லை. அதை ரவிசாஸ்திரியும் சொல்லியிருந்தார். எங்களிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை, அதனால்தான் தடுமாறுகிறோம். அதனால்தான் அனுபவம் வாய்ந்த மஹேந்திரசிங் தோனி 4ஆம் நம்பரில் ஆடியிருக்க கூடாது என்று நானும் கேட்டேன், பலரும் கேட்டிருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவரை ஐந்தாவது இடத்திலாவது இறக்கி ஆட வைத்திருக்கலாம். அரையிறுதி ஆட்டத்தில் ரிஸப் பந்துடன் தோனி இருந்திருந்தால் கண்டிப்பாக ரிஸப் பந்த அந்த ஷாட் ஆடியிருக்க மாட்டார். ஏனென்றால் ஜடேஜா, தோனி விளையாடும்போது அவர்களுக்குள் ஒரு புரிந்துக்கொள்ளுதல் இருந்தது. இதுமட்டுமல்லாமல் இருவரும் நிறைய ஆட்டங்கள் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். இதுதான் ரிஸப் பந்த் விளையாடும்போது இந்த மாதிரி ஆடு, இந்த மாதிரி ஷாட்ஸ் தவிர்த்து விளையாடு என்று அறிவுரை கூறி மேட்ச்சை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம்.
ஐசிசி நாக்கவுட் ஆட்டங்களில் கோலி தொடர்ந்து குறைவான ரன்களில் ஆட்டமிழந்தே வருகிறார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
விராட் கோலி பற்றி சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். சத்தியமாக நான் அவரை பற்றி குறை சொல்லவே மாட்டேன். அவர் இந்த உலகக்கோப்பையில் நிறைய ஐம்பது அடித்திருக்கிறார். ஆப்கன் மேட்ச் ஒரு நல்ல உதாரணம். விராட் கோலி அவுட்டான பின்னர் நிறையவே தடுமாறினார்கள். அந்த மேட்ச்சிலும் அவர் ஐம்பது அடித்திருந்தார். நல்லவே அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்தார். எல்லாமுறையும் அவரால் ஐம்பது, நூறு அடிக்க முடியாது. உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடிய பல மேட்ச்சுகள் இருந்திருக்கிறது. இந்த நாக்கவுட்டில் அவர் அவுட்டானது அம்பையர்ஸ் காலில்தான், இதுவே அம்பையர் அவுட்டில்லை என்று முன்பே சொல்லியிருந்தால் கண்டிப்பாக அவர் அவுட்டில்லை. அந்தமாதிரி விஷயங்களை எடுத்து விராட் கோலியின் திறணை அளவிட முடியாது. அவரை தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பின்னர் எதற்கு இருக்கிறார்கள். இரண்டு பேட்ஸ்மேன்களை மட்டும் நம்பி உலகக்கோப்பைக்கு செல்வது மிகத்தவறான ஒரு விஷயம். அவ்வளவு பேட்ஸ்மேன்கள் இருந்தும் நான் குறை சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலியை அல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தான்.
நேற்றைய தோல்விக்கு தோனி காரணம் என சில விமர்சனங்கள் எழுந்தன. இது எந்தளவிற்கு சரியானது? அதேபோல தோனி செவந்த் டவுன் இறக்கியது சரியா?
இந்த தோல்விக்கு கண்டிப்பாக தோனி காரணம் இல்லை. அவர் பல போட்டிகளில் இதுபோன்ற நிலையில் விளையாடியிருக்கிறார். அவர் கடைசி மூன்று ஓவரில் அடித்து ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த ரன்னவுட் ஆகுவதற்கு முன்புதான் செமயான ஒரு சிக்ஸ் அடித்தார். மில்லிமீட்டரில் ரன்னவுட்டானார், அந்த டைரக்ட் ஹிட் அடிக்காமல் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரில் பல ஆட்டங்கள் வெற்றிபெற்று கொடுத்திருக்கிறார். முன்புபோல தோனி இல்லை, அவருக்கு வயதாகிவிட்டது என்றும் பலர் சொல்லலாம். அதனால்தான் அவர் வந்ததில் இருந்து அடிப்பதில்லை. டி20யில் அவர் கடைசி வரை எடுத்துக்கொண்டு செல்வதுதான் அவருடைய ஸ்டைல், சில சமயங்களில் சிங்கிள்ஸை கூட அவர் தவிர்த்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஏன் அவர் அந்தளவிற்கு செய்கிறார் என்றால் அவ்வளவு அனுபவம் அவரிடம் இருக்கிறது. பல சிஎஸ்கே வீரர்கள் சொல்ல இதை நான் கேள்விபட்டிருக்கிறேன். அவர் கடைசிவரை மேட்ச்சை எடுத்துக்கொண்டு சென்றார் என்றால் பிரஸ்ஸர் பவுலர்கள் பக்கம் திரும்பிவிடும். இந்த தோல்விக்கு தோனி காரணமில்லை.
தோனி கூடிய விரைவில் ரிட்டைர்மெண்ட் அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா?
மஹேந்திரசிங் தோனியை பொருத்தவரைக்கும் எதையுமே சொல்ல முடியாது. அதாவது அவர் எப்போ ரிட்டைர்மெண்ட் அறிவிப்பார்னு நம்பலால் சொல்ல முடியாது. ஆனால், அவர் எப்போது அந்த முடிவை எடுக்கிறாரோ கண்டிப்பாக ஆகா, ஓகோ என்றெல்லாம் ஆடம்பரம் செய்யாமல் பெரிய ப்ரெஸ் கான்பிரன்ஸ் பெரிதாக வைக்காமல் ஒரு சிறிய அறிவிப்பாக கடந்து போய்விடுவார். டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டிலிருந்து அவர் எப்படி விலகினார் என்று அனைவருக்குமே தெரியும். இந்தியாவிற்காக அவர் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக அடுத்த தலைமுறையினர் வந்துதான் ஆக வேண்டும். அதற்கு சீனியர்கள் விலகிதான் ஆக வேண்டும். இது அவருக்கும் நன்றாக தெரியும். இப்போதுவரை மஹேந்திர சிங் தோனி ரிட்டைர்மெண்ட் பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை, கண்டிப்பாக யாரிடமும் அவர் சொல்லியிருக்க மாட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.