லண்டனில் இருந்து தேனி வந்த இன்ஜினியருக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் தேனி மாவட்டத்திற்கு திரும்பி வந்த 17 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 36 வயது இன்ஜினியர் ஒருவர் லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து அவருக்கு கடந்த டிசம்பர் 24- ஆம் தேதி அன்று கரோனா பரிசோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதேபோல், அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டிப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் துபாயில் இருந்து தேனிக்கு வந்தான். இதையடுத்து அந்த சிறுவனுக்கும், பெற்றோருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அந்த சிறுவனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதையடுத்து சிறுவன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.