மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்திற்காக திருச்சி சென்றுள்ள கமல்ஹாசன் உஷா குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 7ஆம் தேதி ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகளை காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதேபோல், உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று நடக்கும் பொது கூட்டத்திற்கு நேற்று இரயில் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்ற அவர் உஷாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தான் ஏற்கனவே அறிவித்தபடி ரூ.10 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார். அப்போது உயிரிழந்த உஷாவின் கணவரும், உஷாவின் தாய் மற்றும் சகோதரரர் உடன் இருந்தனர்.