2021 இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பிறகும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, நேற்று (15.11.2021) மும்பை திரும்பினார். அப்போது அங்கு அவரிடம் இருந்த இரண்டு விலையுயர்ந்த வாட்ச்களை மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த வாட்ச்கள் முன்பிருந்தே தனக்கு சொந்தமானது என்றும், அதில் ஒரு வாட்ச்சின் விலை 1.4 கோடி என்றும், இன்னொன்றின் விலை 40 லட்சம் என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாட்ச்சில் இருந்த சீரியல் எண்ணும், வாட்ச்களுக்கான விலை விவர பட்டியலில் இருந்த சீரியல் எண்ணும் ஒத்துப்போகவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா வைத்திருந்த இரண்டு வாட்ச்களின் விலை மொத்தமாக 5 கோடி என்பதனாலும் சுங்கத்துறை அந்த வாட்ச்களைக் கைப்பற்றியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள ஹர்திக் பாண்டியா, தானே முன்வந்து மும்பை விமான நிலைய சுங்கத்துறை கவுண்ட்டருக்குச் சென்று, துபாயில் இருந்து வாங்கிய பொருட்களின் விவரங்களை அளித்ததாக கூறியுள்ளதோடு, "சுங்கத்துறை பொருட்களை வாங்கியதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க கூறியது. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. சுங்கத்துறை தற்போது நான் செலுத்த வேண்டிய வரி குறித்து முறையான மதிப்பீட்டை செய்துவருகிறது. அந்த வரியை செலுத்த நான் முன்பிருந்தே தயாராக இருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.
மேலும் வாட்ச்சின் விலை தோராயமாக 1.4 கோடி என தெரிவித்துள்ள ஹர்திக், "நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அனைத்து அரசு ஆணையங்களையும் மதிக்கிறேன். இந்த விவகாரத்தை தீர்க்க என்னென்ன ஆவணங்களைத் தர வேண்டுமோ அதனை நான் சமர்ப்பிப்பேன். சட்டத்தின் எல்லைகளை மீறியதாக எனக்கு எதிராக எழுப்பப்படும் குற்றசாட்டுகள் அடிப்படையற்றவை" எனவும் கூறியுள்ளார்.