இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று தனது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பைகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. ஏற்கனவே ஒரு லீக் போட்டியில் இரு அணிகளும் விளையாட இருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2003 உலக்கோப்பைக்கு பிறகு இன்று இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோதுகின்றன. போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "இந்திய அணி இந்த தொடரில் வெற்றிகரமான அணியாக இருக்கிறது. இருந்தாலும் இது கிரிக்கெட் போட்டி. ஒவ்வொரு அணியும் எப்போதும் எதிரணியை வெல்வதற்கே நினைக்கும். அதற்காகவே போராடும். அன்றைய நாளை பொறுத்தே அனைத்தும் நடக்கும். ரோஹித் சர்மா இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். எனவே நாங்கள் ரோஹித் மட்டுமின்றி, ஆள் யார் என்று பார்க்காமல் இந்திய அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முயற்சிப்போம். அதற்காக திட்டங்கள் அமைத்து செயல்படுவோம்" என கூறியுள்ளார்.