மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இறுதியில் தோனி களத்தில் இருந்தபோது எப்படியும் வென்றிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது அவரின் ரன் அவுட் . அரை சதம் அடித்த அவர், ரன் அவுட் ஆனபோது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. இந்திய அணியின் தோல்வி தந்த சோகத்தை கடந்து தோனியின் ரன் அவுட் குறித்து சர்ச்சைகள் ரசிகர்களை கோபமடைய வைத்தது.
தோனி அவுட் ஆன போது 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே விதிகளை மீறி 6 ஃபீல்டர்கள் நின்றதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் தோனியின் இந்த ரன் அவுட் குறித்து தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.
அந்த வீடியோவில் டெர்மினேட்டர் படத்தில் வருவது போல், குப்தில் நன்றாக குறிபார்த்து பந்தால் அடிப்பது போல் அந்த வீடியோ இருக்கிறது. அவர் பந்தினை எடுக்கும் போதே வீடியோவின் ஒரு பக்கத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்ற வார்த்தைகள் இருக்கிறது. ஸ்டம்பை குறிபார்த்து அடித்தவுடன் அது வெடிகுண்டு வெடிப்பதை போல் உள்ளது. ஐசிசி யின் இந்த விடியோவுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Hasta la vista, Dhoni ? #CWC19 pic.twitter.com/TWxbKULjCQ
— ICC (@ICC) July 10, 2019