இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமையில் இந்தியா இருபது ஓவர், ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்றது. தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஷரத் பவார். அவர் தற்போது தோனி எவ்வாறு இந்திய அணிக்கு கேப்டனானர் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "2007ஆம் ஆண்டில் இந்தியா இங்கிலாந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில், ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். அப்போது என்னை சந்திக்க வந்த டிராவிட், இந்தியாவை இனி வழிநடத்த விரும்பவில்லை என்றும், கேப்டன் பொறுப்பினால் தனது பேட்டிங் பாதிக்கப்படுவதாகவும், எனவே தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் நான், அணியை வழிநடத்துமாறு சச்சின் டெண்டுல்கரிடம் கேட்டேன், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
இதனையடுத்து நான் சச்சினிடம், ‘நீங்கள் மற்றும் டிராவிட் இருவருமே அணியை வழிநடத்தவில்லை என்றால், யார் நாட்டை வழிநடத்துவார்’ எனக் கேட்டேன். அதனையடுத்து அவர், ‘அணியை வழிநடத்தக்கூடிய இன்னொரு வீரர் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார். அது வேறுயாருமில்லை தோனிதான். அதன்பிறகு நாங்கள் தோனிக்கு தலைமை பொறுப்பை அளித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.