இங்கிலாந்து அணி, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. கரோனா தொற்று காரணமாக, இந்தத் தொடர் முழுவதும் மூன்றே மைதானங்களில் நடக்கவுள்ளது.
பிப்ரவரி ஐந்தாம் தேதி தொடங்க இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகள், சென்னையில் நடைபெற இருக்கிறது. இதன்மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், உலகின் மிகப்பெரிய மைதானமான, சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக, பிங்க் நிறப் பந்தைக் கொண்டு நடைபெறவிருக்கிறது. இது, இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். ஏற்கனவே இந்தியா, வங்கதேச அணியோடு பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளது. அப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இரு அணிகளும் மோதும் இருபது ஓவர் போட்டித் தொடர், மார்ச் 12 -ஆம் தேதி தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் முழுவதும், சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா - இங்கிலாந்து அணிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன. இந்த மூன்று போட்டிகளும், புனேவில் நடைபெறவுள்ளன.