இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், தொடரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டி கடந்த ஜூலை 22 ஆம் தேதி பங்களாதேஷ், டாக்கா ஷேர் - இ - பங்களா மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 225 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் ஸ்கோர் 160 ஆக இருந்தபோது, பங்களாதேஷ் அணியின் நகிதா அக்தர் வீசிய பந்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், எல்.பி.டபிள்யுவால் தனது விக்கெட்டை இழந்தார். இதில், நடுவர் தனக்கு வழங்கிய அவுட்டுக்கு எதிராக ஹர்மன்பிரீத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் ஆத்திரமடைந்த ஹர்மன்பிரீத் கவுர் களத்தில் தனது பேட்டைக் கொண்டு ஸ்டம்ப்பைத் தாக்கினார். இது போட்டியின்போது பெரும் சர்ச்சையானது. இறுதியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தப் போட்டி சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பங்களாதேஷ் அணியைப் பார்த்து, “ஏன் தனியாக இருக்கிறீர்கள்; நடுவர்களையும் அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியைச் சமன் செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களையும் அழைத்துப் புகைப்படம் எடுப்பதுதான் நல்லது” என்று கூறினார். இதனைக் கேட்டு மனமுடைந்த பங்களாதேஷ் அணி கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டி, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, தனது அணியினருடன் வெளியேறினார்.
இதன் பிறகு பேசிய ஹர்மன்பிரீத் கவுர், “இந்த விளையாட்டின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அடுத்த முறை நாங்கள் பங்களாதேஷிற்கு வரும்போது இதுபோன்ற நடுவர்களைச் சமாளிப்பது குறித்து, நாங்களே எங்களைத் தயார் படுத்திக்கொண்டு வர வேண்டும். நடுவர்கள் எடுத்த முடிவால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்” என்று கூறினார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் செயலும், பேச்சும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.சி.சி, ஹர்மன்பிரீத் கவுருக்குத் தனது சம்பளத்தில் இருந்து 75% அபராதம் விதித்தது. அதேபோல், செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஆசிய கேம்ஸின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட ஹர்மன்பிரீத் கவுருக்கு ஐ.சி.சி. தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதனால், ஹர்மன்பிரீத் கவுரால் காலிறுதி, அரையிறுதி ஆகிய இரண்டு போட்டிகளிலுமே விளையாட முடியாது. அவருக்குப் பதில் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார்.