ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.
ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் முழுமையாக விளையாடவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடக்கும் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். இதனால், இந்திய அணி எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளை ரஹானே தலைமையில் விளையாட உள்ளது. விராட் கோலி இல்லாத தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய, ஆஸ்திரேலிய தரப்பு வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எனப் பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து பேசுகையில், "விராட் கோலி முதற்போட்டிக்கு பிறகு இந்தியா திரும்ப இருப்பது, டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கதவுகளைத் திறந்துள்ளது. விராட் கோலி மிகப்பெரிய வீரர். ஒவ்வொரு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும், சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துள்ளார். அவர் இல்லாததை அனைவரும் உணர்வர். அதே நேரத்தில் இது பல வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தரும். கே.எல்.ராகுல், புஜாரா இருவரும் மிகப்பெரிய வீரர்கள். தங்களை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. விராட் கோலி இருக்கிறார், இல்லை என்பது மறக்கவேண்டிய ஒன்று. கடந்த முறை வெற்றி பெற்றதைப்போல மீண்டும் வெல்ல ஆஸ்திரேலியாவில் உள்ளோம் என்பதே நினைவில் வைக்க வேண்டியது" எனக் கூறினார்.