இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமா ஓய்வு எடுத்துக்கொண்டு ராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் உலகக்கோப்பை முடிந்தவடன் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் பரவின. ஆனால் தோனி இப்போதைக்கு ஓய்வு பெரும் முடிவில் இல்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன், இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. இந்த தொடர்களின் பங்கேற்காமல் இந்திய ராணுவத்தில் தனது பணியை தொடர விரும்புவதாக தோனி அறிவித்தார். இந்நிலையில் தோனியின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பிர் பாராட்டியுள்ளார்.
தோனி குறித்து பேசியுள்ள கம்பிர், "ராணுவத்தில் இணைவது எனும் தோனியின் முடிவு சிறப்பானது. ’உண்மையில் ராணுவ சீருடையை அணிய விரும்பினால், ராணுவத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்’ என்று நான் பலமுறை தோனியிடம் தெரிவித்துள்ளேன். இப்போது ராணுவத்தில் சேவை செய்ய முடிவு செய்திருப்பதன் மூலம் தோனி தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார். மேலும் அவரது இந்த செயல், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ராணுவத்தில் சேர தூண்டுகோலாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
வழக்கமாக தோனி மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் கம்பிர் முதன்முறையாக தோனியை புகழ்ந்து பேசியுள்ளது அவரது ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.