Skip to main content

ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர் இவர் தான்! காம்பீர் கைக்காட்டும் இந்திய வீரர்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

gautam gambhir

 

ஐபிஎல் தொடரில் சமகாலத்தில் சிறந்த வீரர் என்றால், அது கே.எல்.ராகுல்தான் என இந்திய அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த எந்த ஆண்டுகளைப் போலும் இல்லாமல் பஞ்சாப் அணியின் மீது நடப்புத் தொடரில் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பஞ்சாப் அணியை இந்திய வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டுள்ளது. 

 

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் தவறான முடிவால் அவ்வணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.  அடுத்து நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீண்டது. அப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 132 ரன்களைக் குவித்தார். மேலும், இது ஐபிஎல் தொடரில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ரன்களாகப் பதிவாகியுள்ளது. அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் வேளையில், இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் காம்பீர் கே.எல்.ராகுல் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி கே.எல்.ராகுலிற்கு சரியான போட்டியாக அமைந்தது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில தரமான 'ஷாட்ஸ்'களை அடித்து, அவரது திறமையை நிரூபித்திருக்கிறார். இயான் பிஷப் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். சமகாலத்தில், ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வீரர் என்றால் அது கே.எல்.ராகுல்தான்" எனக் கூறினார்.  

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான இயான் பிஷப் கே.எல்.ராகுல் குறித்துப் பேசுகையில், "களத்தில் அவரை நிலைநிறுத்திக்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. முதல் 50 ரன்களை எடுக்கும் வரை, களத்தில் முழுமையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்தது தெரிந்தது. இந்தப் போட்டி அவரை சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளது" என்றார்.