மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் சென்னையில் காலமானார்.
பிரபல தமிழ் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் (வயது 90) முதுமை காரணமாக இன்று (03-05-2024 )காலை 10.30 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை (04-05-2024) காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர் சண்முகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூத்த பத்திரிகையாளரும், 2021 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ. சண்முகநாதன் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் காலத்தில் 1953 ஆம் ஆண்டு அந்நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த சண்முகநாதன் அவர்கள் 2023 ஆம் ஆண்டு இதழியத் துறையில் எழுபதாண்டுகளைக் கடந்த பெருமைக்குரியவர். தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான வரலாற்றுச் சுவடுகள்" நூலின் ஆசிரியர். "ஒரு தமிழன் பார்வையில் 20 ஆம் நூற்றாண்டு வரலாறு", "கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்" வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.