உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரிலும் அவரது பெயர் பரிசீலிக்கப்படவி்ல்லை. இந்த சூழலில் தோனி ஓய்வு பெறப்போகிறார் என தகவல்கள் பரவ ஆரம்பித்தன. ஆனால் பல்வேறு தரப்பாலும் இந்த செய்தி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கொல்கத்தாவில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம், தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தோனியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு போதுமான அவகாசம் இருக்கிறது. இன்னும் 3 மாதத்தில் தோனியின் எதிர்காலம் குறித்த தெளிவான ஒரு தகவல் எங்களுக்குக் கிடைத்துவிடும். தோனியின் எதிர்காலத்தை எவ்வாறு அணுகுவது என்பது அணி நிர்வாகத்துக்கு நன்கு தெரியும்.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், சில விஷயங்களை பொது வெளியில் பேச முடியாது. கோடிக்கணக்கான ரசிகர்களை உடைய தோனி போன்ற ஒரு சாம்பியன் வீரரை அணுகும்போது, சில விஷயங்களை ரகசியமாகத்தான் வைத்திருக்க வேண்டும். மற்ற வகையில் வாரியம், தேர்வுக்குழுவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது" என தெரிவித்தார்.